சனி, 15 மே, 2010

அறிவிப்பு...

நண்பர்களே,

தற்போது பிளாக்கர் வலைதளத்தில் எனது பொதுஜனம் வலைப்பூ இருக்கும் பொசிஷன் வாஸ்த்துப்படி சரியில்லை என்று மணப்புரம் மன்னாரு சொன்னதால் எனது வலைப்பூவினை வேர்ட்பிரஸில் கீழ்காணும் முகவரிக்கு மாற்றியுள்ளேன். ஆகவே கீழ்காணும் வலைப்பூவிற்கு வழக்கம் போல தங்களின் பொன்னான ஆதரவை நல்கி உற்சாகப்படுத்த கேட்டுக்கொள்கிறேன். (சும்மாங்க... எனக்கு பிளாக்கரைவிட வேர்ட்பிரஸ் எழுதுவதற்கு வசதியாக இருப்பதால் இந்த மைக்ரேஷன்)

http://podhujanam.wordpress.com/

ஜானகிராமன்

வெள்ளி, 23 ஏப்ரல், 2010

குழந்தைகளிடமிருந்து கற்றுக்கொள்வோம்...

கொஞ்சநாளைக்கு முன்ன ஒரு மாலை நேரத்தில் என்னோட நண்பன் வீட்டுக்கு போயிருந்தேன். அவனோட 4 வயது குழந்தை என்னோட விளையாடிக் கொண்டிருந்தது. சட்டென கரண்ட் கட் ஆக இருள் சூழ்ந்தது. என் நண்பன் விளக்கெடுக்க உள்ளே சென்றான். அந்த குழந்தை, “மாமா இவ்ளோ நேரம் இங்க இருந்த வெளிச்சம் இப்போ எங்க போச்சு?” என்று கேட்டது. நான் திகைத்தேன். குழத்தையின் கேள்விக்கு பதில் தெரியாத தருணங்கள் எனக்கு ஞானத்தை அளிப்பதாக உள்ளது. அவள், திரும்பவும் “சொல்லுங்க மாமா…” என்று அனத்த ஆரம்பித்தாள். என்னிடம் அவளுக்கு சிரிப்பை மட்டுமே பதிலாக தரமுடிந்தது. இதைக்கேட்டுக்கொண்டே வந்த எனது நண்பன், “சும்மா இருடீ, வெளிச்சத்தை காக்கா எடுத்துட்டு போயிடுச்சி” என்றான். “காக்காவா, இவ்ளோ வெளிச்சத்தை எடுத்துட்டு போயும் ஏன் அது கருப்பாயிருக்கு?”. என்ற தனது அடுத்தக் கேள்வியை கேட்டது. என்னால் தாங்கமுடியவில்லை. “நான் வர்ரன்டா…” என்று சொல்லிவிட்டு நடையைகட்டினேன்.

பிறகு இரண்டு நாள் கழித்து என்னுடைய பள்ளிகால பிசிக்ஸ் வாத்தியாரை சந்தித்தபோது, இந்த கேள்வியைக் கேட்டேன். அவர் குவாண்டம் பிசிக்ஸ் பற்றியும் தெர்மோ டைனமிக்ஸ் பற்றியும் கூறி விளக்கினார். இதே போன்ற கண்டுபிடிப்புக்காக இயற்பியலில் நோபல் கிடைத்திருப்பதாக சொல்லும் போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்த குழந்தை நோபலுக்குரிய சிந்தனை ஓட்டத்தை இயல்பாய் வெளிப்படுத்தியது சலனப்படுத்தியது.
இது போல பல சந்தர்பங்களில் குழந்தைகளின் கேள்விக்கு என்னிடம் பதில் இருப்பதில்லை. எனக்குள், குழந்தைகளிடம் இருக்கும் கேள்வி கேட்கும் ஞானம், ஆராயும் குணம் எதையும் புதிதாக பார்க்கும் தன்மை ஆகியவற்றைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தேன்.

வாழ்க்கையின் எந்தப்புள்ளியில் இந்த குணங்கள் விட்டுப்போய் ஸ்டிரியோடைப்பாகிறோம் என்றும் யோசனை வந்தது. என்ன இருந்தாலும் “காக்கா எடுத்துட்டு போயிடுச்சி..” என்ற எனது நண்பனின் பதில் நியாயமானது இல்லை எனப்பட்டது. அது போன்ற அக்கரையற்ற, அந்த சமயத்தை கடத்துகிற அல்லது பேண்டசியாக்குகின்ற போக்குகளே ஒரு குழந்தையின் ஆய்வுகுணத்தைக் கொன்று சராசரி மனிதனாக்குகிறது எனப்படுகிறது.

கலில்கிப்ரன், “குழந்தைகள் பெற்றோரிடமிருந்து வெளிவருவதில்லை, பெற்றோர் மூலமாக வெளிப்படுகிறது” என்பார். ஆழமான வார்த்தைகள். ஆனால் பெரும்பாலான பெற்றோர்கள் அதைப்புரிந்து கொள்வதில்லை. குழந்தையை அதன் இயல்பிலேயே வளப்பது மிகப்பெரிய கலை. ஆனால் இன்றைக்கு இருக்கும் பெரும்பாலான பெற்றோர்கள், குழந்தையை அவர்களுக்கு விருப்பமான எதோ ஒரு மோல்டில் வைத்து அச்சாக பிரதியெடுக்கவே விரும்புகிறார்கள்.

என்னுடைய சிறிய வயது முழுக்க எனது பூர்வீக கிராமத்தில் தான் கழிந்தது. என்னுடைய தாத்தா எனக்கு ஆகச்சிறந்த நண்பன். பகல் முழுவதும் எனது கேள்விகளாலும் அதற்கான அவரது ஆர்வமான, அக்கரையுள்ள விளக்கங்களாகவும் கழியும். அந்த காலகட்டமே எனக்குள் புத்தாக்கத்தை விதைத்தது. இப்போதிருக்கும் தலைமுறையை பார்க்கும் போது பெரும்பாலும் வருத்தமாகத்தான் இருக்கிறது. ஒரு பயணத்தின் போது, பனைஓலை விசிறியைப் பார்த்த 10 வயது சிறுவன், “மம்மி, டென்னிஸ் பேட் வாங்கிக்கொடுங்க…” என்றான். நமது குழந்தைப்பருவத்தில் நமக்குக் கிடைத்த பல வாய்ப்புகள் இப்போதிருக்கும் தலைமுறைக்கு கிடைப்பதில்லை. பெரும்பாலும் குழந்தைகள் வீட்டில் தனிமையில் இருக்கிறார்கள் அல்லது காப்பகத்தில் அல்லது பள்ளியில் தள்ளப்படுகிறார்கள். வாழ்க்கையின் அபத்தங்கள் பற்றிய கேள்விகளுடன் திரிகிறார்கள். அதை கேட்கக்கூட ஆளில்லை.

சமீப காலமாக ஒளிபரப்பப்பட்டு வரும் பிலிப்ஸ் ஆடியோ பார் பற்றிய டிவி விளம்பரம் ரசிக்கும் படி இருக்கிறது. ஒரு பெரிய வீட்டில் தனியாக இருக்கும் குழந்தை தனக்குக் கிடைத்த பொம்மையின் மீது செலுத்தும் வன்முறையும் அந்த பொம்மை தன்னை மறைத்துக்கொள்வதாகவும் காட்டப்பட்ட காட்சிகள் அற்புதமாக இருக்கும். கடைசியில் பிலிப்ஸ் ஆடியோ பிளே செய்யப்பட்டவுடன் குழந்தை அமைதியாகும். “ஒலி உங்கள் உலகத்துக்கு உயிர் கொடுக்கிறது…” என்ற கேப்ஷனுடன் விளம்பரம் முடியும். என்னுடைய வருத்தமெல்லாம் ஏன் அந்தக் குழந்தையுடன் விளையாட யாருமேயில்லை. ஆடியோவை இயக்கியவர் கொஞ்ச நேரம் அந்த குழந்தையுடன் விளையாடியிருக்கலாமே என்று எண்ணத்தோன்றியது.

ஒரு கடிதம்... ஒரு விளக்கம்...

நண்பர் ஜானகிராமனுக்கு,

வணக்கம்.

நேற்று உங்களுடன் மன்னிப்பு தொடர்பாக பேசிக்கொண்டிருந்தேன். ஆனால், மன்னிப்பு எல்லாவற்றிற்கும் சாத்தியமில்லை என்ற உங்களது வாதம் அப்போது ஏற்புடையதாகத்தான் இருந்தது. பின்னர் யோசிக்கும் போது மன்னித்தலும் மறத்தலும் இல்லாமல் போகும் போது வாழ்க்கையே இல்லாமல் போகுமே என்ற கருத்து மேலோங்கியது.

மன்னித்தலும் மறத்தலும் வார்த்தைகளில் தான் வேறு வேறு. செயலில் ஒன்றுதான். மன்னிப்பு தருகின்ற போதே மறத்தலும் தொடங்க வேண்டும். அப்போதுதான் ஆத்மார்த்தமான மன்னிப்பு அளித்தாக ஆகும்.

மன்னித்துவிடுகிறேன் என்ற வார்த்தையை வழங்கிவிட்டு, அந்த சூழலை மறக்காமல் இருக்கும் போது எதற்காக மன்னிப்பு கோரினோரோ (நிகழ்வு) அது ஆழ்மனதில் இருந்து கொண்டுதான் இருக்கும். மன்னிப்பு வழங்கியவர் மன்னிப்பு பெற்றவரைப் பார்க்கும் போதெல்லாம் சஞ்சலத்துடன்தான் இருப்பார்.

பராவாயில்லை என்று சொல்லிவிட்டு அந்தக்கனமே மறந்துவிடுபவர்கள் பாக்கியசாலிகள். மறத்தலே உன்மையான மன்னிப்பு. குடும்ப வாழ்க்கை முறைக்கு மிக முக்கியம் (அல்லவைகளை) மறத்தல் அவசியம். இது நிறுவன வாழ்க்கைக்கும் பொருந்தும்.

தீ்ங்கு செய்தவருக்கும் நன்மை செய்வது தவத்தால் கிடைக்கும் மனிதப் பண்பு. இது மறத்தலுக்கும் அடுத்த நிலை.

எதை நினைவில் கொள்ள வேண்டும்?

நன்றியை..... (மட்டுமா)

உங்களிடம் விட்டு விடுகிறேன்.

---------------------------------------------------------------

வணக்கம் கண்ணன். உங்களுடைய எதிர்வினை நன்றாக இருந்தது. எனக்குள் சில அடிப்படை கேள்விகளை எழுப்பியது. உண்மையில் மன்னிப்பும் தண்டிப்பும் பற்றிய விரிவான சிந்தனைக்கு விதையாக இருந்தது.

சென்ற வாரம் என்னுடைய மைத்துனன் வீட்டிலிருந்து போன். மைத்துனனின் 3 வயது பையன் பேசினான். அவனை அவனுடைய அப்பா கடுமையாக அடித்துவிட்டதாகவும் என்னிடம் ஞாயம் கேட்கும் படி அழுதுகொண்டே கேட்டான். நானும் என்னுடைய மைத்துனனை விசாரித்தபோது, அந்தப் பையன் சொல் பேச்சுக் கேளாமல் வீட்டின் 5 அடி மதில் சுவரில் ஏறி விளையாடுவதாகவும் ஆபத்துடன் தாண்டுவதாகவும் குறிப்பிட்டு இதனை தடுத்து பயம் தர பையனை அடித்ததாக சொன்னான். நான், பேசி அவனை வழிக்கு கொண்டுவந்திருக்கலாமே, இத்தனை வன்முறை தேவையா என்ற போது, எனது மைத்துனன் சிரித்துக்கொண்டே, உன் மகன் எப்பவாவது இது போல் செய்யும் போது நீ எப்படி நடந்து கொள்வாய் எனப் பார்க்கிறேன் என்றான். பிறகு இந்த ஒரு வாரமாக மைத்துனனின் மகன் மதில் சுவரில் ஏறுவதில்லை.

ஆக, மன்னிப்பும் தண்டனையும் தரப்படுவதின் அடிப்படை
1. தவறு இழைத்தவர் தமது தவறை உளப்பூர்வமாக உணர வேண்டும்.
2. அவர் மறுபடி அந்தத் தவறை செய்யக்கூடாது, செய்யும் எண்ணம் தோன்றக்கூடாது.
3. மன்னிப்போ தண்டிப்போ, சமுகம் எது தவறு எது சரி என்று பிரித்தறியக் கற்றுக்கொள்ளவேண்டும்.

இதில் நான் இரண்டையுமே கையாளத் தெரிந்தவனாக இருக்கவேண்டும். மன்னிப்பினால் எதிர்பார்க்கப்பட்ட விளைவு கிடைக்காது என தெரிந்த பிறகு அல்லது உறுதி செய்துகொண்ட பிறகு தண்டிப்பினை கையெடுக்கவேண்டும். இதைத் தான் வேதத் தத்துவம் சாம, பேத, தான, தண்ட என 4 வகை நீதிமீட்டெடுப்பு முறைகளாக வகுத்துள்ளது.

கண்முடித் தனமாக நான் மன்னிக்கமட்டும் தான் செய்வேன், தண்டனையளிக்க மாட்டேன் என்பது தனிமனித அறப்பண்பாக இருக்கலாமே ஒழிய அது பொதுநன்மைக்கு பொருத்தமானதாகாது. "என் கையில் இருப்பது பூச்செண்டா துப்பாக்கியா என்பதை எனது எதிரி தீர்மானிக்கிறான்" என்ற மாவோவுடைய தத்துவம் கவனத்தில் கொள்ளத் தக்கது.

வேறொறு கோணத்தில், மன்னிப்பென்பது, மறைமுகமாக அதே போன்ற தவறை நான் செய்ய எடுத்துக்கொள்ளும் உரிமையில் போய் முடிகிறது. நீ தவறுக்கு தண்டனையளித்தால் நீயும் அதே தவறை செய்ய பயப்படுவாய். ஆனால் நீ மன்னித்து விடும் போது, பிற்பாடு நீ அந்தத் தவறை செய்தாலும் மன்னிப்பை நீயும் எதிர்பார்ப்பாய்.

சன் டிவிக்கும் திமுகவுக்கும் உறவு சரியாக இல்லாத போது, சன் டிவி ஸ்ப்பெக்டரம் ஊழலை வெளிக்கொண்டுவந்தது. பிற்பாடு அவர்களுக்கிடையே உள்குத்து நிகழ்ந்த பிறகு, சன் டிவி பெருந்தன்மையுட்ன் ஸ்பெக்டரம் ஊழலை மறந்தது. இந்த மன்னிப்போம் மறப்போம் எந்த வகை அறம்?

ஆக, மன்னித்தலும் தண்டித்தலும் இரண்டுமே சரிதான். மிகத் தேவையானதும் கூட. யாரிடம், எப்போது உபயோகப்படுத்துகிறாய் என்பதைப் பொருத்து அதன் மதிப்பு மாறுபடும்.

புதன், 21 ஏப்ரல், 2010

சுறா - முன்கதையோட்டம்

சுறா படம் சூறாவளியாக தியேட்டர்களை சுழற்றி அடிக்கப்போகிறது. படத்தின் ஆரம்ப காட்சியே இது வரை உலக திரைப்பட வரலாற்றில் யாரும் யோசிக்கக் கூட முடியாத அளவுக்கு வெறித்தனமாக இருந்து பட்டையை கிளப்புகிறது.

ஆரம்பக் காட்சியில் கடற்கரை. ஒலிப்பெருக்கி சுனாமி வருகிறதென எச்சரிக்கை அலறுகிறது. மக்கள் அனைவரும் அடித்துப்பிடித்து கரையை நோக்கி ஓடுகிறார்கள். இளைய தளபதி ஒருகையில் கட்டுமரத்தைப் பிடித்துக்கொண்டு கடலை நோக்கி வீர நடை போட்டு வருகிறார். ஒரு வழிப்போக்கர், “தம்பி கடலுகிட்ட போகாதீங்க சுனாமி வருது” என்று சொல்ல… “…சுனாமிய பாத்து பயப்பட நான் ஒன்னும் புறா இல்லடா அந்த சுனாமியே பாத்து பயப்படும் சுறா!” (அப்பாடா டைட்டிலுக்கும் கதைக்கும் லிங்க் கிடைச்சுடுச்சி) என்கிறார்.

அந்த கட்டுமரத்தில் தனியாளாக ஏறி சுனாமி அலையை தனது துடுப்பால் ஒரு அடி அடிக்க சுனாமி சிக்கன்குனியா காய்ச்சல் வந்தது போல் சுருண்டு விழுகிறது. பிறகு கரையேறி வரும் இ.தளபதியை இதற்காகவே காத்திருந்த கூட்டம் ஆலம் எடுத்து, குலவை போட பாட்டு ஆரம்பம்.

நான் தான் பச்ச மஞ்ச பிங்க் கலரு தமிழன், உன்னோட ஒன்னுவிட்ட அண்ணன், ஏழை எல்லாம் முன்னேறனும், உழைச்சு சாப்பிடனும், 3011ல நாம தான் அமெரிக்க அதிபர் - அண்டார்டிக்கா பிரதமர் என்று தத்துவப்பாட்டை பாடிச்செல்கிறார். பின்னாடியே ஒரு 20,30 பேர் ஒரே கலர் சட்டையை போட்டு (எங்கிட்டிருந்து தான் வந்தாய்ங்களோ) சொல்லி வெச்சாப்புல ஒரேவிதமான டான்ஸ் மூவ்மெண்ட்டை கொடுக்கிறார்கள்.

ஆரம்பக் காட்சியின் கிலி அடங்குவதற்காக அடுத்த காட்சியில் தமண்னா வந்து குளுமைப் படுத்துகிறார். வடிவேலுவும் இ.தளபதியும் சேர்ந்து சில சீன்களில் தமண்ணாவை கலாய்க்க, தமண்ணா சில சித்து வேலைகள் செய்ய இடையே இரண்டு மூன்று டூயட் பாடல்கள் வேறு ஓட இருவருக்கும் இடையே அமரக்காதல் முளைக்கிறது. அநியாயம் செய்யும் முதலாளிகளை இ.தளபதி தட்டிக்கேட்க ரவுடிகள் பெரிய அலப்பரையுடன் என்ட்ரி கொடுக்கிறார்கள். சில பல சவால்கள் சவடால்களுக்குப் பிறகு இ.தளபதியிடம் அடி வாங்கி அடக்கமாகிறார்கள்.

இதனிடையே மானே தேனே என்று போட்டுக்கொள்வது போல் வடிவேலு காமெடி, குடும்ப பாசம், இ.தளபதியோட வீரபராக்கிரமங்கள் வந்து செல்கின்றன. மொத்தத்தில் இந்த படத்துக்கு சுறா என்று பெயர் வைத்ததைவிட தமிழ்படம் பார்ட் 2 என்று வைத்திருக்கலாம்.

ஆஆவ்… நினைக்கும் போதே கண்ண கட்டுதே… படத்தோட டிரெய்லர சன்டீவியில் பாத்ததுக்கே எனக்கு இந்த எபக்ட்னா, கத்தரி வெயிலில் ரிலிசாகப்போகும் முழு சுறா படத்தை பாக்கும் தைரியம் யாருக்கு இருக்கு? ஓடுங்க.. ஓடுங்க.. அது நம்மளை குறிபாத்து ஓடி வந்திட்டு இருக்கு…

வியாழன், 15 ஏப்ரல், 2010

ஒரு பஸ் பயணம்...

சென்ற வாரம் ஒரு வேலையாக சென்னை சென்றுவிட்டு திருத்தணிக்கு பஸ்ஸில் திரும்பிக் கொண்டிருந்தேன். பஸ் ஏறும் போதே மணி இரவு 10ஐத் தொட்டிருந்தது. திருவள்ளுர் வந்த போது 11ஐத் தாண்டியிருந்தது. திருவள்ளுரில் 45 வயது மதிக்கத்தக்க எளிய கிராம மனிதர் ஏறினார். பாண்டுர் செல்ல டிக்கட் கேட்டார். பாண்டூர் என்பது திருவள்ளுர் திருத்தணிக்கு இடைப்பட்ட கிராமம். திருவள்ளுரில் இருந்து சுமார் 10 கி,மி தொலைவிருக்கும். கண்டக்டர் கடுப்புடன், “பாண்டூர் எல்லாம் பஸ் நிக்காது, இது எக்ஸ்பிரஸ். கீழே இறங்கு” என்றார். ஏறிய பயணி, “1 மணி நேரமா நிக்கிறேன், எந்த பஸ்ஸிம் வரலை. பாண்டூரில் நிறுத்தக்கூட வேண்டாம் கொஞ்சம் ஸ்லோ பண்ணா போதும் நான் இறங்கிக்கிறேன்” என்றார். இப்போது கண்டக்டருடன் டிரைவரும் சேர்ந்து கொண்டார். பயணியை கண்டபடி திட்ட ஆரம்பித்தார். இறங்குமாறு கட்டாயப்படுத்தினார். விதிமுறைகளைப் பேசினார். “ரொம்ப அவசரம் என்றாலும் இப்படித் தான் ரூல்ஸ் பேசுவிங்களா” என்றபடி பயணியும் திட்டிக்கொண்டே இறங்கிச்சென்றார். கண்டக்டர் தாம் நினைத்தை நடத்தியதால் உற்சாகமாக டிரைவருடன் பேசிக்கொண்டிருந்தார்.

எனக்கு கீழே இறங்கிச்சென்ற அந்த நபருக்கு என்ன அவசரமிருக்கும் என்று நினைக்கத் தோன்றியது. ஒரு வேளை அந்த கிராமத்தில் யாருக்காவது உடம்பு சரியில்லாமல் போயிருக்கலாம் அல்லது அவரது குழந்தைகளும் குடும்பம் அவருக்காக காத்துக்கொண்டிருக்கலாம் அல்லது அவசரத் தேவைக்காக பணத்தை ஏற்பாடு செய்ய நகருக்கு வந்திருக்கலாம். எப்படியோ அன்றிரவு அவருக்கு நீண்ட இரவாகத் தான் இருந்திருக்கும். “என்றைக்குமே வாய்த்ததில்லை - ஜன்னலோர இருக்கை: இரண்டு நகரங்களுக்கு இடைப்பட்ட சாலையிலிருக்கும் கிராம மக்களுக்கு” என்ற ஆனந்த விகடனில் சமீபத்தில் படித்த கவிதை ஞாபகம் வந்தது. இங்கு இருக்கையல்ல பஸ்ஸில் ஏறுவதற்கான வாய்ப்புக்கூட வழங்கப்படவில்லை.

எங்களுடன் பணிபுரியும் மூத்தப் பணியாளர் குரு அடிக்கடி, “ஒரு செயலை சரியாக செய்வதைவிட சரியான செயலை செய்வது மிகமுக்கியம்” என்பார். கண்டக்டர் அந்த சமயத்தில் பாண்டூர் நிறுத்தமாட்டேன் என்பது விதிகளின் படி சரியானதென்றாலும் சூழ்நிலையை கணக்கில் கொண்டு அவருக்கு வாய்ப்பளித்திருக்கலாம். திருவள்ளூரில் அவர் சண்டை போட செலவிட்ட நேரத்தில் அவரை ஏற்றிக்கொண்டு பாண்டூரில் நிறுத்திச் சென்றிருக்கலாம்.