Community லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Community லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 24 பிப்ரவரி, 2010

தீரா விருப்பங்கள்...

வயிற்றுப் பிழைப்புக்கு ஒரு தொழில் என்ற நிலை மிகவும் கொடியது. தனக்குப் பிடிக்காத செயலை நிர்பந்தத்துக்காக செய்வதே நரகம் என்று ஸ்பார்டகஸ் படத்தில் ஒரு வசனம் வரும். நிர்பந்தம் குடும்பத்தால், நண்பர்களால் வரலாம். வேறு வழியில்லாமல் நாமே கூட அதைக் கைக்கொண்டிருக்கலாம். நமது தேசத்தின் மிகப்பெரிய பிரச்சனை இதுவாகத் தான் இருக்கும். நமக்கு நாம் விரும்பிய செயல்களை செய்வதற்கு வாய்ப்புகள் அமைவதில்லை.

எ பக்கெட் லிஸ்ட் என்று ஒரு படம். வில் ஸ்மித் நடித்தது. அதில் எல்லா வசதிகளும் வாய்ப்புகளும் பெற்ற ஒரு பெரும்பணக்காரர், எதுவுமே இல்லாத குடும்பத்துக்காக வாழ்க்கையைத் தொலைத்த சாதாரண கார் மெக்கானிக் ஆகிய இருவர் தமது வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் கேன்சர் நோய் பாதிக்கப்பட்டு ஓர் மருத்துவமனையில் சந்திக்கின்றனர். நோய் இருவருக்கும் பாரபட்சம் காட்டாமல் ஒரேவித வலியை தருகிறது. இதில் பணக்காரருக்கு நோயின் தீவிரத்தை சகித்துக்கொள்ள முடியவில்லை. வாழ்க்கையில் கஷ்டங்கள் மட்டுமே சந்தித்த ஏழையால் நோயை சகித்துக்கொள்ள முடிகிறது. இது பணக்காரரின் கவனத்தை ஈர்க்கவே, இருவரும் நண்பர்களாகிறார்கள். தமது பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்கள். அப்போது, வாழ்க்கையில் பொருள் ஈட்டுவதற்காக தாம் தொலைத்த பல நிறைவேறாத விருப்பங்களை இருவரும் பட்டியலிட்டுக்கொள்கிறார்கள். இமயமலைப் பனிச்சிகரத்தில் ஏறுவது, அமேசான் காட்டில் வேட்டையாடி உணவுண்பது, பிரியமான கால்பந்தாட்ட வீரரை சந்திப்பது, ஓடும் விமானத்தில் அழகான பெண்ணைப் புணர்வது என அவர்களின் தீரா விருப்பங்களை தமது எஞ்சியிருக்கும் வாழ்நாளில் தீர்த்துக்கொள்வதென தீர்மானித்து பணக்காரரின் அளவில்லா நிதியுடனும், ஏழையின் வழிகாட்டுதலுடனும் பயணத்தை ஆரம்பிக்கின்றனர். அவர்களின் எல்லா விருப்பமும் நிறைவேறி, மரணத்தை முழுத்திருப்தியுடன் எதிர்கொள்ளும் இறுதிக்காட்சி நெகிழ்ச்சியானது.

நமது வாழ்க்கையிலும் இது போல நம்மால் நிறைவேற்ற முடியாத விருப்பங்கள், நமது பணி மற்றும் குடும்பச்சுமையினால் நீண்டு கொண்டுதான் இருக்கின்றன. நமது மரணத்துள்ளாவது அதில் சிலவற்றை நிறைவேற்றிக்கொள்ள வாய்ப்புக் கிடைத்தால் நாம் பாக்கியவான்கள்.

கண்ணுக்கு முன்னே தொலைபவை...

குல தெய்வ வழிபாடு என்பது ஒரு சிறு துளி தான். தன்முனைப்பு பெருகிவிட்ட இக்காலச்சூழலில் எல்லாம் எளிமையாகவும் விரைவாகவும் கிடைக்கவேண்டும் என்ற எண்ணம் அதிகரித்து விட்டது. முன்பெல்லாம் வங்கியில் பணம் எடுக்க முழு அரை நாள் வங்கியில் காத்திருந்த காலம் போய், இப்போது ATMல் எனக்கு முன் இரண்டு பேர் காத்திருப்பதையும் பொருத்துக்கொள்ள முடிவதில்லை.

சில வாரங்களுக்கு முன் சென்னையில் மைலாப்பூர் அருகே ஒரு ஓட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். எனது மேசையை துடைத்துக்கொண்டிருந்த 70 வயது பெரியவர் ஏதோ ஒரு பாடலை முனுமுனுத்துக்கொண்டிருந்தார். பிறகு அவரிடம் பேச்சுக்கொடுத்தபோது, அவர் ஒரு திண்டிவனம் பக்கம் தெருக்கூத்து வாத்தியார் எனவும் இப்போதெல்லாம் அதற்கு மரியாதையில்லை என்பதாலும் அவரின் பிள்ளைகள் அவரை கவனிக்காததாலும் ஓட்டலில் பாத்திரம் கழுவ வந்ததாகவும் சொன்னார். வருத்தமாக இருந்தது. நம் காலகட்டத்திலேயே டேப்ரிக்காடர், 5, 10 காசு பில்லைகள், கைத்துரிகை பேனர்கள், அஞ்சல் அட்டை என பல பொருட்கள் காணாமல் போய்விட்டன.

ஆளைக்கொல்லும் தொழில்நுட்பம் நமக்கு அவசியம் தானா? இவைகளை நாம் இழப்பதைவிட இவைகளை நாம் இழந்துகொண்டிருக்கிறோம் என்ற உணர்வு இல்லாமல் இருப்பது வலிக்கிறது. குறைந்தபட்சம் நாம் இழப்பவற்றின் மிச்சங்களை கொஞ்சம் சேகரித்து வைப்போம். அவை மியூசியத்தில் வைத்து நமக்கு பின் வரும் தலைமுறை அடையாளம் காணவாவது பயன்படட்டும்.

குலதெய்வ வழிபாடு


சென்ற வாரம் ஞாயிற்றுக்கிழமை, எங்கள் குடும்பத்துடன் எங்களின் பூர்வீக கிராமத்தில் (வெளியகரம் என்ற பள்ளிப்பட்டு ஒன்றித்தில் உள்ள தமிழ்நாட்டின் வடக்கு கடைக்கோடி கிராமம்) உள்ள குலதெய்வ வழிபாட்டுக்கு சென்றிறுந்தோம்.

எங்களின் குலதெய்வம் பெரியாண்டவர், ஆலாலகங்கா என்பதை அன்று தான் தெரிந்து கொண்டேன். மாமரத்தையும் சிறுகல்லையும் தமது இருப்பாக கொண்ட தெய்வம். முட்புதர் சூழ்ந்த காட்டில், குலதெய்வ வழிபாட்டு முறைகள் சிக்கலகாவும் தீவிரமாகவும் இருக்கும் என்று எங்கள் பாட்டி கூறுவார். 108 தேங்காய், ஆடு, பன்றி, கோழி ஆகிய 3 உயிர்ப்பலி என ருத்திரமான பூசைகள் முன்பு நடக்குமாம். ஆனால் தற்போது எங்கள் கிராமத்திலிருக்கும் பூசாரிக்கும், வயதான பெரியவர்களுக்கும் அம்முறைகள் பற்றி தெரியவில்லை. எங்கள் தெய்வம் இருக்கும் இடத்தை சரியாக அடையாளம் காணவே பல விவாதமும் நீண்ட தேடுதலும் நிகழ்ந்தது.

கடைசியான எனது சிறு வயதில் எனக்கு காது குத்தும் போது குலதெய்வ வழிபாடு நடந்ததாக எனது தந்தை சொன்னார். அவருக்கும் முறைகள் பற்றிய புரிதல் இல்லை. தனது பனி படர்ந்த ஞாபகத்தில் எனது பாட்டி குலதெய்வ வழிபாட்டு முறையை எங்களுக்கு சொல்லி வழிநடத்தினார். எங்கள் குடும்ப வழக்கம் பற்றி, எனது அடுத்தத் தலைமுறைக்கு கற்றுக்கொடுக்க நான் என்ன வைத்திருக்கிறேன் என்று எண்ணியபோது வருத்தம் ஏற்பட்டது. சடங்குகள் வெறும் நிகழ்வுகள் மட்டுமல்ல. அவை ஆண்டாண்டுகால மனிதத்தின் நம்பிக்கை. எனக்கு முந்தைய தலைமுறை வரை காலங்காலமாக நடைபெற்ற முறைகள், கண்ணுக்கு முன்னே கரைந்து வருவதை தவிர்கமுடியவில்லை. பிற்பாடு ஒரு நாள் எனது கிராமத்துக்கு சென்று, மிச்சமிருக்கும் பாரம்பரிய அறிவை பதிவு செய்யவேண்டும் என எண்ணியுள்ளேன்.