புதன், 24 பிப்ரவரி, 2010
பணித்திறம்...
ஒருமுறை பஞ்சாயத்து தலைவர்கள் பயிற்சிக்காக நானும், திரு வள்ளிநாயகம் அவர்களும் சென்று கொண்டிருந்தோம். பொதுவாகவே, நான் அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பேன். 70 ஐ தாண்டிய இந்த வயதிலும் பஞ்சாயத்து துறை சார்ந்து, தீவிரமாக இயங்கிவரும் அவரது ஈடுபாடு, என்னை பல முறை ஒழுங்குபடுத்தியுள்ளது. எப்போதும் அவர் தன்னுடனே வைத்திருக்கும் பஞ்சாயத்து சட்டம் பற்றிய புத்தகத்தை என்னிடம் ஒரு குறிப்பிட்ட சட்ட பிரிவை சுட்டிகாட்டி, அதை குறித்து படிக்க தந்தார். அந்த புத்தகம் மிகவும் பழுப்பேறியிருந்தது. எல்லா பக்கங்களிலும் அவர் எழுதியிருந்த மேற்கோள்கள், அடிக்கோடுகள், குறிப்புகள் என இன்றைய தினம் வரை பஞ்சாயத்து சட்டத்தில் நடந்த எல்லா மாற்றங்களும் குறிக்கப்பட்டிருந்தது. எனக்கு ஆச்சரியம் தாளாமல், "எப்படி சார், இதுபோல் பராமரிக்கமுடிகிறது?" என கேட்டேன். அவர் மிக எளிமையாக, “பண்ணனுங்க. இல்லைனா அப்டேட் செய்ய முடியாது" என்றார். அவர் அந்த சட்டம் 1994ல் அரசு அறிக்கையாக (கெசட்) வெளிவந்தபோது வாங்கி, தாள் தாளாக பிரித்து ஒவ்வொரு தாளுக்கு இடையிலும் ஒரு வெள்ளைத்தாளை வைத்து, கடைசி பக்கத்திற்கு அடுத்து ஒரு 20 பக்கங்கள் கூடுதல் வெள்ளைத்தாள் வைத்து தொகுத்துத்தைத்துக் கொண்டாராம். பின்னர், அவ்வப்போது நிகழ்கிற சட்ட மாற்றம், நீதிமன்ற வழக்கு, அரசாணை, சட்ட விதிகள், சுற்றறிக்கைகள், அரசு திட்டம் என எல்லாவற்றையும் அதற்குரிய பிரிவுக்கு அருகில் குறித்து வருகிறார். இவரது தொடர்ச்சியான 13 ஆண்டுகளுக்கும் மேலான உழைப்பு "வேலைப்பாடு" (றிக்ஷீஷீயீமீssவீஷீஸீணீறீவீsனீ) என்றால் என்ன என்பதை எனக்கு கற்றுத் தந்தது. ஓர் சிறந்த நடராஜர் சிலையில், முகத்தில் சொரியும் மஞ்சன நீர், மூக்கு நுனி வழியாக வழிந்து வீசிய கரத்தின் விரல் நுனியோடு இறங்கி, தூக்கிய திருவடியின் விரல் நுனியிலே சொட்டுமாம். அத்கைய நுண்ணிய பணித்திறம் அவரிடம் இருப்பதாகவே உணர்ந்தேன். எனது பணியிலும் இது போன்ற வேலைப்பாட்டை கொண்டுவர முயற்சிக்கும் எண்ணம் உறுதிபட்டது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக