ஒரு கோடைகாலத்தின் மாலைவேளையில் நானும் ராஜ்குமாரும் பெரியார் பஸ்நிலையம் பக்கத்தில் உள்ள ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வெளியே வரும்போது சட்டென மழை பிடித்துக்கொண்டது. நல்ல மழை; நாங்கள் ஹோட்டலின் வெளிக்கூரையின் கீழ் நின்றுகொண்டிருந்தோம். அந்த வெளிக்கூரையில் நெருக்கி 20 பேர் நிற்கலாம். நாங்கள் வந்தபோது சுமார் 15 பேர் நின்றுகொண்டிருந்தனர். மழை வலுக்கவே, மேலும் சில பேர் எங்களுடன் சேர்ந்து கொண்டனர். அப்போது மழைக்கு ஒதுங்க ஒரு கன்றுக்குட்டி கூரைக்குள் நுழையப்பார்த்தது. உடனே எல்லாரும் அந்த கன்றுக்குட்டியை கூரைக்கு வெளியே துரத்தினார்கள். கன்றுக்குட்டி மீண்டும் மீண்டும் உள்ளே வர முயற்சித்தது. நமது மக்களும் அதை விடாமல் துரத்தினார்கள். கொஞ்ச நேரம் மழையில் பொறுத்துப் பார்த்த கன்றுக்குட்டி, பிறகு நனைந்தபடி சென்று விட்டது.
அப்போது சாதாரணமாகத் தெரிந்த இந்த நிகழ்வினை பிறகு யோசித்துப் பார்க்கும் போது, உண்மையில் எனது கருணையின் அளவு என்ன? ஏன் என்னால் ஒரு பார்வையாளனுக்கு மேல் இந்த நிகழ்வில் பங்கெடுக்க முடியவில்லை? மழையில் நனையக்கூடாது என்ற எனது விருப்பத்துக்கும் அந்த கன்றுக்குட்டியின் விருப்பத்துக்கும் என்ன வேறுபாடு? எந்த வகையில் நாம் உயர்ந்தவர்கள்? மனதுக்குள் அடுக்கடுக்காக பல கேள்விகள் ஊர்ந்தன. ஓய்வாக இருக்கும் போது டி.வியில் வரும் வங்கி விளம்பரத்தில் ஒரு யானைக்குட்டி கால்பந்து விளையாடுவதையும், செல்போன் விளம்பரத்தின் நாய்க்குட்டியையும் ரசிக்கும் மனம், யதார்த்தத்தில் எனது சுகநிலைக்கு முன்னுரிமை அளித்தது பற்றி தொடர்பு படுத்தியபோது எனது தன்னூக்கம் கொஞ்சம் மட்டுப்படத்தான் செய்தது.
இது போல, பேருந்தில் பிடித்த இடத்தை சகபயணிக்கு விட்டுத்தர மனம் மறுப்பது, அலுவலகச் சலிப்பை மனைவியிடம் வெளிப்படுத்துவது, எனது முன்னெண்ணத்தின் அடிப்படையில் அணி உறுப்பினர்களின் குணங்களைத் தீர்மானிப்பது, என் மீதான தவறுகளுக்கு எனக்கு நானே விளக்கமளித்துக்கொள்வது என பல்வேறு சந்தர்ப்பங்களில் என்னைப் பற்றி நானே அணிந்துகொண்ட முகமூடிகள் கரைந்து, எனது நடுநிலைப் பற்றி எனக்கு சந்தேகம் ஏற்பட்டதுண்டு. வண்டி நன்றாக ஓட எஞ்சின் மட்டுமல்ல; அவ்வப்போது பிரேக்கும் முக்கியமெனப்படுகிறது. அந்த வகையில், எனது நம்பிக்கைகள், எனது செயல்பாடுகள், நிறுவனத்துக்கும் எனக்குமான உறவு அதன் பயன்கள் என பல கோணங்களில் ஆய்வு செய்து கொள்ள இது போன்ற ஆற்றுப்படுதல் நிகழ்வுகள் உதவுகின்றன. என்னை நானே ஆய்வுக்கு உட்படுத்தும் போது ஓரளவுக்கு என்னை சரிசெய்து கொள்ள முடிகிறது. எஸ்.ரா சொல்வது போல், “எறும்புகள் இழுத்துக் கொண்டு போகும் வெல்லக்கட்டியைப்போல, உலகை எனது இருப்பிடத்துக்கு கொண்டு வரும் முயற்சியாகவே” ஆற்றுப்படுதல் நிகழ்வினைக் கருதுகிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக